Thursday, July 30, 2009

காட்சியை உணரும் கண்களும் கண்களை வாட்டும் நோய்களும்

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று பாடிக் கொண்டிருந்த தேனீர்க் கடை வானொலியைக் கேட்டு ரசித்தவாறு சந்தியைக் கடக்க முற்பட்ட வேளையில் முன்னால் வந்த முதியவருடன் மோதி இருவரும் சைக்கிளால் தெருவில் விழுநதோம் விழுந்தவரைக் கைகொடுத்து எழுப்பிவிட அந்த முதியவர் கேட்ட முதற்கேள்வி கண்ணைப் பிடரிக்கை வைத்துக் கொண்டே வந்தனீர்? தவறு என்பக்கம் என்பதால் நானும் தலையைக் குனிந்தபடி நடந்தேன்


கண்கள் எமது முகத்தில் இருக்கின்ற பிரதானமான புலனங்கம். கவிஞர்களால் மட்டுமல்ல எமது உடலாலும் அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. முகத்திலே மிகவும் பாதுகாப்பாக என்புக் குழியினுள் வைக்கக்பட்டிருக்கும் கண்களைக் கண்மடலும், இமையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும். தவிர கண்ணீர் சிரப்பியிலிருந்து சுரக்கப்படும் கண்ணீர் அடிக் கொருக்கால் கண்களைக் கழுவிக் கொண்டே இருக்கும். இந்தக் கழுவல் வேலையைச் செய்ய எம்மையறியாமலே கண்மடல்கள் மூடித்திறந்து ஒரு வைப்பரை (Whiper) போலச் செயற்படும்.

கண்ணின் பிரதான தொழில் பார்வையைக் கொடுப்பதைத் தவிர பேசும்போது கருத்தைத் தெரிவிக்க உதவியாகவும் (Non Verbal communication) வேகத்தை உணர்வதற்கும், தூரத்தை அறிவதற்கும் கண்ணின் செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன. ஒளியை ஒடுக்கி விம்பத்தை ஏற்படுத்துவதற்காக கண்வில்லையையும் (Lense) உள்ளே செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவதற்காகக் கதிராளியும் (Iris) விம்பத்தைப் பதிய வைத்து அவற்றைக் கணத்தாக்கங்களாக மாற்ற விழித்திரையும், (Retina) கண்ணில் கூறுகளாக் காணப்படும். தவிர கண்ணை அங்கே இங்கே அசைப்பதற்கு கட்தசைகள் உதவியாக இருக்கும். விழித்திரையில் விழுந்த விம்பம் நரம்பு கணத்தாக்கங்களாக மாற்றப்படுவதற்கு அங்கே கோல் கலங்களும் (Rods) கூம்புக் கலங்களும் (Cores) காணப்படும். கண்ணிலிருந்து வெளியேறும் நரம்புகள் (வலது இடது நரம்புகள்) மண்டையோட்டின் அடித் தளத்தில் கபச்சுரப்பிக்கு (Pituitary Gland) மேலாக இணைந்து பிரிந்து பின்னர் கல்கரைன் என்ற பகுதியை நோக்கிச் செல்லும். நமது உடலில் அதிக ATP சக்தி உடைக்கப்படுவது இவ்வாறு விம்பத்தை புலனாக மாற்றுவதற்காகவே என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.

கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக் கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis)இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis(பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.

பொதுவாக ஏற்படும் கண்நோய் அதிக ஆபத்து இல்லாதது. தொற்று உள்ள நாட்களில் கண்சிவந்து, பீளை சாறி, பார்க்கவே பயங்கரமாக இருந்தாலும் இந்த நோய் தானாகவே சரியாகிவிடும். (Self Limiting) இந்தக் காலப் பகுதியில் கண்களைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதும், மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றி விடாமல் இருக்க நோயாளியின் பாவனைப் பொருட்களை பாவிக்காது விடுவதும் செய்ய வேண்டிய தடுப்பு முறைகளாக இருக்கும். அதிக ஒளியைப் பார்க்கும் போது கண்கள் கூசக்கூடும். இக்கூச்சம் நோய் மாறியதும் பழைய நிலைக்கு வந்துவிடும்


கண்ணில் பிரசர் அதிகமாவதைக் குளுக்கோமா என்று மருத்துவப் பெயரால் அழைப்பார்கள். கண்ணிலே காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தற்போது கண்அழுத்தத்தை செவ்வையாக அளக்கும் கருவிகளும், நீர்மயவுடனீர் உருவாதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தற்போது சர்வ சாதாரணமாக பாவனையில் உள்ளதால் குளுக்கோமா நோய் தற்போது அதிகமாகப் பிரச்சனைகளைக் கொடுப்பதில்லை.

கண்பார்வை பற்றி சொல்லும் போது விற்றமின் ஏ பற்றிப் பலருக்கு ஞாபகம் வரலாம். கண்பார்வை நிறப் பொருளை ஆக்குவதற்கு விற்றமின் ஏ இன்றியமையாதது. விற்றமின் ஏ குறைபாடு ஏற்படும் போது கண்களில் புள்ளியும் உலர்வுத் தன்மையும் காணப்படும். பால் மற்றும் ஈரல் போன்ற விலங்குணவுகளிலும், மஞ்சள் நிறமான பழவகைளிலும் (அட எங்கடை மாம்பழம்) விற்றமின் ஏ அதிகமாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை விற்றமின் ஏ குறைபாட்டால் பார்வை பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது.

கண்ணில் விம்பத்தை ஒருக்கும் தன்மையில் குறைபாடு உள்ளவர்களுக்கு (Refractory) கண்ணாடிகள் அல்லது ஒட்டும் வில்லைகள் (Contact Lense) மூலம் குறைபாடுகளை சரி செய்து கொள்ளலாம். கண்ணாடி அணிபவர்கள் கூட காலத்திற்குக் காலம் கண்ணைப் பரிசோதித்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை கற்ராக்ட் (Cataract) எனப்படும் விழியின் ஊடுபுகவிடும் தன்மை (வில்லையில்) குறைந்து போதல். இவற்றுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சையில் வில்லை அகற்றப்பட்டடு செயற்கை வில்லைகள் பொருத்தப்படும். இது தற்போது இலகுவாக செய்யப்படக் கூடிய சத்திர சிகிச்சையாக உள்ளது.

கண்ணுக்கு பரம எதிரிகளான நோய்கள் தான் நீரிழிவும் (Diabetic mellitus) அதிக குருதியமுக்கமும்(hypertension).நீரிழிவை பொறுத்தவரை அது Cataract ஏற்படுவதை அதிகரிக்கிறது. தவிர நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடற்று இருக்கும் நீரிழிவு நோயானது டயபிடிக் றெட்டினோபதி (Diabetic retinopathy) என்ற நோயை கண்ணில் ஏற்படுத்தும். இந்த நிலையில் விழித்திரையில் அதிக குருதிக்கலன்கள் உருவாவதால் பார்வையில் குறைபாடு ஏற்படும். இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த டயபிடிக் றெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் லேசர் கதிர் சிகிச்சை மூலம் கண்பார்வை மேலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.

அதியுயர் குருதியமுக்கம் விழித்திரையிலுள்ள குருதிக்கலன்களை தடிப்படைய வைக்கும். தவிர திடீரென அதிகரிக்கும் குருதியமுக்கம் காரணமாக விழித்திரை பிரிவடைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம். இதனை முன் கூட்டியே வராமல் தடுப்பதற்கு குருதியமுக்கத்தைகட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான்


.

.

கடைசியாக ஒரு விடயம் கண்மூலம் அனுப்பப்படும் செய்திகள் கல்கரைன் சல்கஸ் (calcarine sulcus) எனுமிடத்தில் மூளையால் உணரப்படுவதாக சொன்னேன் அல்லவா? அந்த கல்கரைன் சல்கஸ் எங்கே இருக்கு தெரியுமோ? பிடரிபாகத்தினுள்ளே தான். இனி யாரும் யாரைப் பார்த்தும் கண் என்ன பிடரியுக்கையோ எனக் கேட்கக் கூடாது. என்ன விஷயம் எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே?வீரகேசரி 18.11.2007

பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.

பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது என்று யாரையாவது கேட்டால் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியைப் போல தாய் ஒருவர் பெரும் வேதனையுடன் (வயிற்று வலியுடன்) வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவது போலவும் உடனே அவர் பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் சில நிமிடங்களில் ஒரு தாதி வெளியே ஓடி வந்து உங்களுக்கு ஒரு பையன் அல்லது பெண் பிறந்திருக்கிறார் என்று சொல்வது போலவும் காட்சிகள் ஓடலாம் ஆனால் குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை

.


சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (Normal Vaginal Delivery) என்பது பிரசவ வலி வந்தவுடன் பிரசவ அறைக்குள் தாய் குழந்தையைப் பெறுவதாகவோ அல்லது பிரசவலி (Oxytocin)எனப்படுகின்ற ஓமோன் வகையை ஊசி மூலம் ஏற்றி பிரசவ வலியை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பெறும் முயற்சியாகவோ இருக்கலாம். எது எவ்வாறாயினும் கருப்பைச் சுருக்கத்துடன் (Uterine Contraction) கருப்பைக் கழுத்து திறக்கப்பட்டு (Cervical dilatiation)குழந்தை வெளியே வரும் படிமுறைகள் நிகழும்.


சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான வலி ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.


கர்ப்பகாலம் 35 வாரங்களை அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் திகதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் பிரக்ஸன் கிரிக் எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான நோக்கள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து செல்லும். உதாரணமாக ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவை வருகின்ற வலி பின்னர் இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவையாகவும் பதினைந்து தடவைகளுக்கு ஒரு முறையாகவும் ஏற்பட்டு பிரசவவலியாக மாறும் போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள்ளும் மூன்று தடவைகள் குத்து எழும்பல் நிகழும்.சாதாரணமாக பிரசவ வலி எழும்பும் போது பன்னீர் குடம் உடைந்து திரவம் வெளியேறும் போது தாயானவள் உடனடியாக பிரசவ விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு அனுப்ப்பட வேண்டும்.அங்கே மருத்துவர் பிரசவ நிலையை அளவிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வார்.


பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது எனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும். இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்) பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது பினாட் என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்

ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவர் கருப்பைக் கழுத்து விரிவை (Cervical dilatation) அளவிட்டுக் கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம் குழந்தையின் இதயத்துடிப்பு / தாயின் நாடித்துடிப்பு குருதியமுக்கம் என்பன தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக் கட்டத்தை அடையும் போது வலியைச் சற்றுக் குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற வலி நிவாரணிகள் தாய்க்கு ஏற்றப்படும். சாதாரணமாக பிரசவ காலமானது 12-18 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில் தாய் உணவு நீராகமின்று (Fasting) வைக்கப்படுவார். அடடா குழந்தையைப் பெறும் நோவுடன் இருக்கும் தாயை பட்டினி போடும் கல் நெஞ்சக்காரர்களா மருத்துவர்கள் என நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. பிரசவத்தில் ஏதும் சிக்கல் நிகழ்ந்து அறுவைச் சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான தயார் நிலையே இந்த Fastingஇதன்போது ஊசி வழியாகத் தாய்க்கு தேவையான நீராகரம் சென்று கொண்டிருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில் (foetal distress) அல்லது குழந்தையின் அம்னியன்பாய் பொருளினுள் மலம் கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட நேரமாகியும் குழந்தை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் (Prolong Labour) சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும் இதன் போது வலி உச்ச நிலையை அடையும்.


குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும். தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். (உங்கள் சாதகம், கிரகநிலை, செவ்வாய் தோஷம் எனப்படும் இந்த வேளைகளில் சோதிடர்களால் கணிக்கப்படும்.) தலையை தொடர்நது தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்திலிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும்.


.

அப்பாடா குழந்தை பிறந்துவிட்டது என்று இருந்துவிட முடியாது. அதன் பிறகும் திக் திக் நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். என்ன என்று கேட்கிறீர்களா? சூல்வித்தகம் முழுமையாக வெளியேறும் வரை பிரசவம் முடிந்துவிட்டதாக கூற முடியாது. பொதுவாக குழந்தையை தொடர்ந்து சூல்வித்தகமும் வெளியேறிவிடும். ஆனாலும் சிலவேளைகளில் கருப்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று நீண்டநேரம் அடம்பிடிக்கும், சூல்லித்தகத்தை கருப்பையின் உள்ளே கைவிட்டு மருத்துவர் வெளியே எடுப்பார். பின்னர் எபிசியோட்டமி தைக்கப்படும். இதன் பிறகும் திகில் நிமிடங்கள் முடிவதில்லை. சிலவேளைகளில் கருப்பையிலிருந்து குருதி பெருகுவது நிற்காவிடில் மீண்டும் எல்லோரது நெஞ்சத்திலும் பயம் பற்றிக் கொள்ளும். எனவே குருதிப்பெருக்கை அவதானிப்பதற்காக பிரசவத்தின் பின்னர் ஏறத்தாழ 2 மணித்தியாலங்கள் தாய் கண்காணிப்பின் கீழ் பிரசவ அறையினுள்ளேயே வைத்திருக்கப்படுவார். இதன்போது குழந்தையை பாலுட்ட தாயிடம் குழந்தை வழங்கப்படும். இவ்வளவு காலமும் சுமந்த வேதனை குழந்தையை முத்தமிடும் தாய்க்கு பஞ்சாக பறந்துவிடும். சாதாரணமாக குழந்தை பிறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் (வேறு குழப்பங்கள் தாய்க்கோ குழந்தைக்கோ இல்லாதவிடத்து) தாய் சேய் இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


இப்போது சொல்லுங்கள் திரைப்படங்களில் வருவது போல பிரசவம் என்பது பயங்கரமான அனுபவம் இல்லைதானே? என்ன சரியோ நான் சொல்லுறது?
28.10.2007

வீரகேசரி

Tuesday, October 21, 2008

பிணிதீர்க்கும் மருந்துகள்.

என்ன எழுதியிருக்கிறது எனத்தெரியாமல் தலையை பிய்த்து கொள்ள வைக்கும் விடயங்களில் ஒன்று வைத்தியர் எழுதித் தரும் மருந்துச் சீட்டு என்றால் அதிலும் ஒரு உண்மையிருக்கிறது. கிறுக்கல் எழுத்துகளுக்குக் கீழே ஒரு கையொப்பத்துடன் அவர் தரும் துண்டைக் கொண்டு போய் மருந்துக்கடைகளில் குளிசைகள் வாங்கிய அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். அந்தக் கிறுக்கல்களை வாசித்து மருந்து கொடுக்கும் மருந்துக்கடைக்காரரை நான் கடவுளுக்கு அடுத்தபடியில் இருப்பவராக நினைத்துக் கொள்ளவதுண்டு. ஆயினும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களில் மருந்துத்துண்டு (Prescription) இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்ற நியதிகள் உண்டு. முக்கியமான முதல் விதி மருந்துத் துண்டுகள் எழுதப்படும்போது வாசிக்கப்படக்கூடிய முறையில் எழுதப்படவேண்டும். அத்துடன் மருந்தின் முழுப்பெயரும் எழுதப்படவேண்டும். முதல் இரண்டு எழுத்துகள் மட்டுமே விளங்கும் விதத்தில் எழுதப்படுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுக் கொள்ளப்படாத குறுக்கங்கள் தவிர்க்கப்படவேண்டும். மருந்துத் துண்டில் நோயாளியின் பெயர், வயது, திகதி என்பன இடப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் மருந்தின் பெயர், எடுக்கப்படவேண்டிய அளவு, ஒருநாளைக்கு எடுக்கப்படவேண்டிய தடவைகள், கொடுக்கப்படவேண்டிய நாட்கள் என்பன தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். மருந்துகள் யாவும் ஆங்கில எழுத்துக்குறிகளிலேயே எழுதப்படும். இவற்றுக்கீழே வைத்தியரின் கையொப்பமும் பதியப்பட வேண்டும்.

இவ்வளவு முன்னேற்பாடுகளும் ஏன் என நீங்கள் சந்தேகப்படலாம். ஆங்கில மருந்துகள் சரியான முறையில் எடுக்கப்படாமல் தவறு நிகழ்ந்தால் நன்மைக்குப் பதிலாக தீமையே விளையும் என்பது உண்மை. முக்கியமாக தீவிரமான மருந்துகள் வழங்கப்படும் போது அதிக கவனம் தேவை. 

ஆங்கில மருந்துகள் பல்வேறுபட்ட முறைகளில் வெளிவருகின்றன. ஊசி மருந்துகளும் குளிசைகளும் கூட்டுக் குளிசைகளும் பாணி மருந்துகளும் பூச்சு மருந்துகளும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டிருப்பினும் உள்ளிழுக்கும் மருந்துகளும் (இன்கேலர்கள்) தோலில் ஒட்டும் துண்டுகள் (Patches) சொட்டு மருந்துகள் (droplets) குதவழி மருந்துகள் என்று பல்வேறு வழிகளில் இந்த மருந்துகள் வெளிவருகின்றன. மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு மருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் போது நோயாளியின் நோய், நோயின் வீரியம் , நோயாளியின் வயது, நோயாளியிடமுள்ள வேறு நோய்கள் போன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மருந்துத் துண்டை எழுதுவார்.

பொதுவாக வாய் மூலம் உள்ளெடுக்கப்படும் குளிசைகள் வயிற்றினுள் சென்று பின்னர் குடலில் அகத்துறிஞ்சப்பட்டு குருதியில் சேர்ந்து பின்னர் குருதி மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை அல்லது மருந்து தொழிற்பட வேண்டிய இடத்தை அடைந்து செயற்பட ஆரம்பிக்கும். இதனால் மருந்து தொழிற்பட நேரம் அதிகம் எடுக்கும். ஊசி மூலம் வழங்கப்படும் மருந்துகள் நேரடியாக குருதியை அடைவதால் வாயில் விழுங்கப்படும் மருந்துகளை விட இவை விரைவான தொழிற்பாட்டைக் காட்டும். ஊசி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. தசைக்குள்ளே செலுத்தப்படும் மருந்துகள் செயற்படக் கொஞ்சம்காலம் அதிகமாகவே தேவைப்படும். ஆனாலும் ஒருதரம் ஏற்றப்பட்ட ஊசி நீண்ட காலத்திற்கு செயற்படும் தன்மையுள்ளதாக இருக்கும். ஊசிமூலம் தசைக்குள்ளே ஏற்றப்படும் கருத்தடை மருந்துகள் மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்தை குருதிக்குள் விடுவதால் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு தொழிற்படும் தன்மை வாய்ந்தது. தோலுக்கு கீழே ஏற்றப்படும் ஊசி மருந்துகள் உள்ளன. இன்சுலின் ஊசி இதற்கு நல்லதொரு உதாரணம். இதுவும் ஊசிமருந்தின் தன்மையை பொறுத்து ஒருநாளைக்கு மூன்று தடவைகள், இரண்டு தடவைகள் அல்லது ஒரு தடவை என வேறு பட்ட இடைவெளிகளில் ஏற்றப்படலாம். இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மருந்து பாவிக்கவேண்டிய தடகைள் என்பது மருந்தின் தன்மையிலும் பாவிக்கப்படும் முறையிலும் தங்கியிருக்கும்.

வாய்மூலமாக விழுங்கும் மருந்துகள் கூட பல்வேறுபட்ட முறைகளில் எடுக்கப் படுகின்றன. சில மருந்துகள் சாப்பாடிற்கு முன்னரும், சில சாப்பாட்டிற்கு பின்னரும் எடுக்கவேண்டும் என வைத்தியரால் கூறப்படும். முக்கியமாக வாந்தியை தடுப்பதற்கான சில மருந்துகள் சாப்பாட்டிற்கு 20 நிமிடங்கள் முன்னர் எடுக்கப்படவேண்டும் என மருத்துவர் சொல்லியிருப்பார். (சாப்பாட்டை முடித்த கையோடு வாந்தியோடு மருந்தும் வெளியேறமுடியாத முன்னேற்பாடு அது) அதுபோல சாப்பாட்டுடன் தாங்கமடைந்து வீரியம் இழந்து போகும் மருந்துகளும் சாப்பாட்டிற்கு முன்னரே எடுக்கப்படவேண்டும். வயிறெரிவுக்கான சில மருந்துகள் சப்பிச் சாப்பிடவேண்டியவை. இவை பெரும்பாலும் செயற்கை சுவையூட்டப்பட்டனவாக இருக்கும். 

வாய்மூலம் விழுங்கப்படும் மருந்துகள் என்று நான் அழுத்திக் குறிப்பிடும்போதே வாய்மூலம் வேறு வகையில் எடுக்கப்படும் மருந்துகள் இருக்கும் என நீங்கள் ஊகித்து இருப்பீர்கள். வாய்மூலம் இழுக்கப்படும் மருந்துகள்தான் அவை! பெரும்பாலும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கு இவ்வகையான மருந்துகள் வழங்கப்படும். மூச்சிழுத்தலுடன் ஒன்றிணைத்து இந்த மருந்துகளை பாவிக்க முன் மருத்துவரின் முறையான வழிகாட்டல் அவசியம். ஏனென்றால் சரியான முறையில் உள்ளிழுக்கப்படாது விட்டால் அவை போய்ச் சேரவேண்டிய நுரையீரல்களுக்கு மருந்து சேராமல் வெறுமனே வாயிலே தங்கிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மூச்சுடன் ஒருங்கிசைவாக மருந்தை உள்ளெடுக்க முடியாதவர்கள் ஸ்பேசர் எனப்படும் கண்ணாடிபோன்ற கூட்டை பயன் படுத்துவதன் மூலம் முறையான பலன்களைப் பெறமுடியும். வாய்மூலமான உள்ளிழுத்தல் முறையில் ஸ்திரோயிட்டு மருந்துகளைப் பாவிப்பவர்கள், மருந்தை உள்ளிழுத்து முடிந்ததும் வாயை அலசிக் கொப்பளித்து வெளியே துப்புதல் அவசியம்.

நோய்கள் சிலவற்றுக்கான மருந்துப்பாவனை குறுகிய காலம் கொண்டது. ஆயினும் நீரிழிவு, அதியுயர் குருதி அமுக்கம் (பிரசர்), தையிரோயிட்டு மருந்துப் பாவனை என்பன வாழ்நாள் முழுதும் பாவிக்கப் படவேண்டிய மருந்துகள் ஆகும். இவ்வகை மருந்துகள் பாவிப்பவர்கள் மாதாந்த பரிசோதனைகள் செய்வதன் மூலம் மருந்துகளின் அளவு கூட்டிக்குறைக்கப்படவும் வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களது மருந்தின் அளவு அவர்களின் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை வைத்து தீர்மானிக்கப்படும். அவ்வாறே குருதி அமுக்கம் பரிசோதிக்கப்பட்டே இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்படும். எனவே இந்த நோயாளிகள் கிரமமாக பரிசோதனைகளைச் செய்வதுடன் அவற்றை மருத்துவருக்கு காட்டுவதும் அத்தியாவசியமானது.

சிலவகை மருந்துகளுக்கு சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படலாம். இவ்வாறு மருந்துகளுக்கு அல்லது உணவிற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் கட்டாயமாக அதுபற்றி தான் செல்லும் மருத்துவருக்கு சொல்லவேண்டும்.

வயது சென்றவர்களுக்கு மருந்து கொடுக்கும்போது வீட்டில் உள்ள வேறொருவர் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஞாபக மறதி காரணமாக மருந்தை எடுக்காமல் விடுதலும் அதிகளவான மருந்தை எடுக்கும் அபாயமும் காணப்படுவதால் இவர்களில் விசேட கவனம் செலுத்துதல் அவசியம். முக்கியமாக அவர்களின் மருந்துகளை தனித்தனி பேணிகளில் இட்டு பெயர் எழுதிவைக்கவேண்டும். எல்லா மருந்தையும் ஒரே பேணிக்குள் போடும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்படவேண்டும்.
மருந்துகள் எவ்வாறு பாவிப்பது எனத்தெரியாவிட்டால் மருந்தாளர்களிடமோ அல்லது வைத்தியரிடமோ அது பற்றிக் கூறி தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கில மருந்துகள் தகவலுடன் கொடுக்கப்படும்போது மருந்தாகவும் தவறாக கொடுக்கப்பட்டால் நஞ்சாகவும் இருப்பதே இதற்குக் காரணம். இப்போது புரிகிறதா மருந்துத் துண்டை வைத்தியர் எழுதும்போது ஏன் தெளிவாக எழுதவேண்டும் என நியமங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று. புரியும் எழுத்தில் எழுதுமாறு வைத்தியர்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுவோம். 

வாயுபுத்திரன்

Thursday, October 16, 2008

தன்கையே தனக்குதவி

அதிகமான இரத்த இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு செய்வதென்பது நீண்ட காலமாக மருத்துவர்கள் பயன் படுத்தும் ஒரு சிகிச்சை முறை. முக்கியமாக சத்திர சிகிச்சைகள் திட்டமிடப்படும்போது இதற்கு இவ்வளவு இரத்தம் தேவைப்படலாம் என முன்கூட்டியே நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து பின்னர் சத்திர சிகிச்சைகளை தொடங்குவது வழமை. சத்திர சிகிச்சையின் போது அல்லது அதற்கு பின்னான காலப்பகுதியில் குருதிப்பெருக்கு ஏற்பட்டால் சிலவேளைகளில் மேலதிக குருதியை வழங்கவேண்டிய நிர்ப்பந்ததில் வைத்தியர்கள் இருப்பார்கள். ஒரு வைத்தியசாலைக்கு தேவையான குருதி அங்கே காணப்படும் இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இரத்த வங்கிகள் அல்லாத சிறிய வைத்தியசாலைகள் தங்களுக்கு அருகில் இருக்கும் இரத்த வங்கியுள்ள பெரிய வைத்தியசாலைகளில் தங்கள் இரத்த தேவைகளுக்காகத் தங்கியிருக்கும். 


இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் முனைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட முறைதான் ஒருவரின் குருதியை எடுத்து அவருக்கே பாவிக்கும் Autologus Transfusion என்ற முறை! இவ்வாறு ஒருவரின் குருதியை அவருக்கே பாவிப்பதில் பல்வேறு நுட்பங்கள் பாவிக்கப்படலாம். 

ஒருவருக்குசத்திரசிகிச்சை திட்டமிடபபடும்போது முதலிலேயே அவரது குருதியை சேமித்து அவருக்கு வழங்கும் முறை உள்ளது. இதன்போது சத்திர சிகிச்சை நடைபெறும் தினத்திற்கு 4 வாரங்களுக்கு முன்னர் ஒரு பைந்து ரத்தமும் இவ்வாறு ஒரு வார கால இடைவெளிகளில் ஒவ்வொரு பைந்து குருதியும் சேர்க்கப்படும். ஒரு பைந்து இரத்தம் என்பது 450 மில்லிலீற்றர் குருதியாகும். இவ்வாறு சேர்க்கப்பட்ட குருதி இரத்தம் மூலம் பரவும் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். (அவரவர் குருதியை அவரவருக்கு செலுத்தும்போது கூட இந்த சோதனை தேவைதானா என நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது.) இவ்வாறு மொத்தமாக 4 பைந்து இரத்தம் சேமிக்கப்பட முடியும். சாதாரண தானம் செய்பவருக்கு ஆகக்குறைந்தது ஒரு டெசி லீற்றருக்கு 12 கிராம் ஈமோகுளோபின் இருக்கவேண்டும் என முன்பு சொன்னேன். ஆனால் தனக்குத் தானே தானம் செய்பவருக்கு ஆரம்பத்தில் ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 11 கிராம் இருந்தாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். இவ்வாறு சேமிக்கப்பட்ட இரத்தம் விசேட அடையாளத்துடன் தனியான குளிரூட்டியில் சேமிக்கப்படும். சத்திரசிகிச்சையின்போது இரத்தம் ஏற்றப்படும் தேவை ஏற்படாது விட்டால் இந்த குருதி வேறு ஒருவருக்காகவும் பாவிக்கப்படாது வீசப்படும். இது இந்த முறையில் உள்ள குறைபாடு என்றும் சொல்லலாம். ( சாதாரண தானம் மூலம் பெறப்பட்ட குருதி என்றால் அது வேறு ஒரு நோயாளிக்கு பாவிக்கப்படலாம்.) ஆனாலும் இந்த விசேட முறையிலான தனக்குத்தானே இரத்தம் வழங்கும் முறையால் அரத்தம் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சாத்தியம் குறைவு, மற்றும் இரத்தம் ஏற்றப்படும்போது ஏற்படும் எதிர்ப்பு ஒவ்வாமை ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறைவு. தவிர மிகவும் அரிதாக காணப்படும் பம்பாய் ஓ போன்ற வகையில் குருதியை கொண்டிருப்போர்களுக்கு இவ்வாறான தனக்குத் தானே குருதி வழங்கல் முறை மிகவும் பயனுள்ளது


இரத்த வங்கிகள் குருதியின் கூறுகளான செங்குழியங்கள், வெண்குழியங்கள், குருதிச் சிறுதட்டுகள், குருதித் திரவ இழையம் போன்றனவற்றை சேமித்து வைத்திருக்கும். 
இரத்தவங்கிகள் யாரிடமிருந்து குருதியை பெற்றுக்கொள்கின்றன? குருதியை தானம் செய்பவர்கள் மூன்று வகையினர். ஒருவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி இலவசமாக பொதுநர நோக்கோடு தானம் செய்பவர் முதலாவது வகையினர். தங்கள் உறவினர் நண்பர்களின் இரத்தத் தேவைக்காக வந்து தானம் செய்பவர்கள் இரண்டாம் வகையினர், காசு பெற்றுக்கொண்டு இரத்தத்தை வழங்குபவர்கள் மூன்றாம் வகையினர். இவ்வாறு பணம் பெற்று குருதியை வழங்குவது இலங்கையில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொது நோக்கோடு தானம் செய்பவர்களிடமிருந்தும், உறவினர் நண்பர்களுக்காக தானம் செயப்வர்களிடமிருந்தும் மட்டுமே தற்போது இரத்தம் பெறப்படுகிறது.
இரத்ததானம் செய்பவர்கள் நோய்நொடி இல்லாதவர்களாகவும், போதியளவு ஈமோகுளோபின் கொண்டவர்களாகவும் (ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 12 கிராம்), ஆபத்தான பாலியல் தொடர்புகள் இல்லாதர்களாகவும், குறைந்தது 50 கிலோகிராம் உடல்நிறை உடையவர்களாகவும் இருத்தல் அவசியம். 
இவ்வாறு தானமாகப் பெறப்பட்ட குருதியின் அளவைவிட அதிக நோயாளிகளுக்கு அதிக குருதித் தேவை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் கையைப்பிசைந்து கொண்டிருக்கும் தன்மை எதிர்காலத்தில் ஏற்படலாம். அதைத் தவிர சில மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றையவர்கள் தந்த குருதி மாற்றீடுகளை மறுக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கும் ஒரு மாற்று வழியை தேடவேண்டிய நெருக்கடி வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தானமாக வழங்கப்படும் குருதி எப்போதும் ஆய்வு கூடப்பரிசோதனைகளின் பின்னரை பாவிக்கப்படுகிறது என்றாலும் உலகத்தில் அதிகரித்து வரும் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் குருதி மூலம் பரவும் சந்தர்ப்பம் சிறிய அளவில் இன்னமும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.


தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு வகை சத்திர சிகிச்சைக்கு சற்று நேரத்திற்கு முன்னர் சத்திர சிகிச்சைக்கூடத்தில் வைத்து அவரின் குருதியை எடுத்து அதற்கு பதிலாக சேலைன் ஏற்றிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தல் ஆகும். இம்முறையில் இரண்டு பைந்து இரத்தம் சேமிக்கமுடியும். பின்னர் சத்திர சிகிச்சை முடியும் தறுவாயில் மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இதன்போது இரண்டாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து முதலில் ஏற்றப்படும். முதலாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து இரண்டாவதாக ஏற்றப்படும். இங்கே இரண்டு பை இரத்தமும் நோயாளியுடனேயே இருப்பதால் அடையாளக்குறிகள் மாறுவதன் மூலம் தவறான இரத்தம் செலுத்தப்படும் அபாணம் இல்லை. அத்துடன் சத்திர சிகிச்சை முடிந்நதும் மீண்டும் இரத்தம் ஏற்றப்படுவதால் வீண்விரயமும் குறைவு. ஆனால் வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர் போன்றோரின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியமானது.


தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு முறைதான் சத்திர சிகிச்சையின்போது வெளியேறும் குருதியை சேர்த்து பின்னர் சுத்திகரித்து மீண்டும் நோயாளிக்கு ஏற்றும் முறையாகும். இதை எல்லா சத்திர சிகிச்சையிலும் பாவிக்கமுடியாது. என்பு சத்திர சிகிச்சை, இதய சத்திர சிகிச்சை, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை போன்றவற்றில் மட்டும் பாவிக்கமுடியும். கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகமுள்ள குடல் சத்திர சிகிச்சை போன்றசவ்வில் இம்முறையை பாவிக்கவே முடியாது. இந்த முறையை பாவிப்பதற்கு சிர விசேட இயந்திரங்களும் அவசியமானவை.
என்னதான் தன்கையே தனக்குதவி என்று இருந்தாலும் உடவில் கிருமிதொற்று உள்ள நோயாளிகள், சிலவகை இதய நோயாளிகள், வலிப்பு நோய் உள்ளவர்கள், குருதி ஆமுக்கம் அதிகமுள்ள தாய்மார்கள், வளர்ச்சி குறைநடத குழந்தையை கருவில் தாங்கும் தாய்மார்கள், புற்று நோய் உள்ளவர்கள் என்று தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் பங்கெடுக்கமுடியாதவர்கள் பலரும் உள்ளார்கள். எனவே சாதாரண குருதிக் கொடையாளிகளை மருத்துவ உலகம் எப்போதும் எதிர்பார்த்தே இருக்கிறது. உங்களுக்கு என்ன வயதாகிறது? பதினெட்டு முடிந்து விட்டதா? இதுதான் நல்ல நேரம். ஒருமுறை இரத்ததானம் செய்துபாருங்கள். உலகத்தையே வென்றுவிட்டது போல உணர்வீர்கள். இது ஒரு புண்ணியமாகப் போகட்டும்.