என்ன எழுதியிருக்கிறது எனத்தெரியாமல் தலையை பிய்த்து கொள்ள வைக்கும் விடயங்களில் ஒன்று வைத்தியர் எழுதித் தரும் மருந்துச் சீட்டு என்றால் அதிலும் ஒரு உண்மையிருக்கிறது. கிறுக்கல் எழுத்துகளுக்குக் கீழே ஒரு கையொப்பத்துடன் அவர் தரும் துண்டைக் கொண்டு போய் மருந்துக்கடைகளில் குளிசைகள் வாங்கிய அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். அந்தக் கிறுக்கல்களை வாசித்து மருந்து கொடுக்கும் மருந்துக்கடைக்காரரை நான் கடவுளுக்கு அடுத்தபடியில் இருப்பவராக நினைத்துக் கொள்ளவதுண்டு. ஆயினும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களில் மருந்துத்துண்டு (Prescription) இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்ற நியதிகள் உண்டு. முக்கியமான முதல் விதி மருந்துத் துண்டுகள் எழுதப்படும்போது வாசிக்கப்படக்கூடிய முறையில் எழுதப்படவேண்டும். அத்துடன் மருந்தின் முழுப்பெயரும் எழுதப்படவேண்டும். முதல் இரண்டு எழுத்துகள் மட்டுமே விளங்கும் விதத்தில் எழுதப்படுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுக் கொள்ளப்படாத குறுக்கங்கள் தவிர்க்கப்படவேண்டும். மருந்துத் துண்டில் நோயாளியின் பெயர், வயது, திகதி என்பன இடப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் மருந்தின் பெயர், எடுக்கப்படவேண்டிய அளவு, ஒருநாளைக்கு எடுக்கப்படவேண்டிய தடவைகள், கொடுக்கப்படவேண்டிய நாட்கள் என்பன தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். மருந்துகள் யாவும் ஆங்கில எழுத்துக்குறிகளிலேயே எழுதப்படும். இவற்றுக்கீழே வைத்தியரின் கையொப்பமும் பதியப்பட வேண்டும்.
இவ்வளவு முன்னேற்பாடுகளும் ஏன் என நீங்கள் சந்தேகப்படலாம். ஆங்கில மருந்துகள் சரியான முறையில் எடுக்கப்படாமல் தவறு நிகழ்ந்தால் நன்மைக்குப் பதிலாக தீமையே விளையும் என்பது உண்மை. முக்கியமாக தீவிரமான மருந்துகள் வழங்கப்படும் போது அதிக கவனம் தேவை.
ஆங்கில மருந்துகள் பல்வேறுபட்ட முறைகளில் வெளிவருகின்றன. ஊசி மருந்துகளும் குளிசைகளும் கூட்டுக் குளிசைகளும் பாணி மருந்துகளும் பூச்சு மருந்துகளும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டிருப்பினும் உள்ளிழுக்கும் மருந்துகளும் (இன்கேலர்கள்) தோலில் ஒட்டும் துண்டுகள் (Patches) சொட்டு மருந்துகள் (droplets) குதவழி மருந்துகள் என்று பல்வேறு வழிகளில் இந்த மருந்துகள் வெளிவருகின்றன. மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு மருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் போது நோயாளியின் நோய், நோயின் வீரியம் , நோயாளியின் வயது, நோயாளியிடமுள்ள வேறு நோய்கள் போன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மருந்துத் துண்டை எழுதுவார்.
பொதுவாக வாய் மூலம் உள்ளெடுக்கப்படும் குளிசைகள் வயிற்றினுள் சென்று பின்னர் குடலில் அகத்துறிஞ்சப்பட்டு குருதியில் சேர்ந்து பின்னர் குருதி மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை அல்லது மருந்து தொழிற்பட வேண்டிய இடத்தை அடைந்து செயற்பட ஆரம்பிக்கும். இதனால் மருந்து தொழிற்பட நேரம் அதிகம் எடுக்கும். ஊசி மூலம் வழங்கப்படும் மருந்துகள் நேரடியாக குருதியை அடைவதால் வாயில் விழுங்கப்படும் மருந்துகளை விட இவை விரைவான தொழிற்பாட்டைக் காட்டும். ஊசி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. தசைக்குள்ளே செலுத்தப்படும் மருந்துகள் செயற்படக் கொஞ்சம்காலம் அதிகமாகவே தேவைப்படும். ஆனாலும் ஒருதரம் ஏற்றப்பட்ட ஊசி நீண்ட காலத்திற்கு செயற்படும் தன்மையுள்ளதாக இருக்கும். ஊசிமூலம் தசைக்குள்ளே ஏற்றப்படும் கருத்தடை மருந்துகள் மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்தை குருதிக்குள் விடுவதால் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு தொழிற்படும் தன்மை வாய்ந்தது. தோலுக்கு கீழே ஏற்றப்படும் ஊசி மருந்துகள் உள்ளன. இன்சுலின் ஊசி இதற்கு நல்லதொரு உதாரணம். இதுவும் ஊசிமருந்தின் தன்மையை பொறுத்து ஒருநாளைக்கு மூன்று தடவைகள், இரண்டு தடவைகள் அல்லது ஒரு தடவை என வேறு பட்ட இடைவெளிகளில் ஏற்றப்படலாம். இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மருந்து பாவிக்கவேண்டிய தடகைள் என்பது மருந்தின் தன்மையிலும் பாவிக்கப்படும் முறையிலும் தங்கியிருக்கும்.
வாய்மூலமாக விழுங்கும் மருந்துகள் கூட பல்வேறுபட்ட முறைகளில் எடுக்கப் படுகின்றன. சில மருந்துகள் சாப்பாடிற்கு முன்னரும், சில சாப்பாட்டிற்கு பின்னரும் எடுக்கவேண்டும் என வைத்தியரால் கூறப்படும். முக்கியமாக வாந்தியை தடுப்பதற்கான சில மருந்துகள் சாப்பாட்டிற்கு 20 நிமிடங்கள் முன்னர் எடுக்கப்படவேண்டும் என மருத்துவர் சொல்லியிருப்பார். (சாப்பாட்டை முடித்த கையோடு வாந்தியோடு மருந்தும் வெளியேறமுடியாத முன்னேற்பாடு அது) அதுபோல சாப்பாட்டுடன் தாங்கமடைந்து வீரியம் இழந்து போகும் மருந்துகளும் சாப்பாட்டிற்கு முன்னரே எடுக்கப்படவேண்டும். வயிறெரிவுக்கான சில மருந்துகள் சப்பிச் சாப்பிடவேண்டியவை. இவை பெரும்பாலும் செயற்கை சுவையூட்டப்பட்டனவாக இருக்கும்.
வாய்மூலம் விழுங்கப்படும் மருந்துகள் என்று நான் அழுத்திக் குறிப்பிடும்போதே வாய்மூலம் வேறு வகையில் எடுக்கப்படும் மருந்துகள் இருக்கும் என நீங்கள் ஊகித்து இருப்பீர்கள். வாய்மூலம் இழுக்கப்படும் மருந்துகள்தான் அவை! பெரும்பாலும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கு இவ்வகையான மருந்துகள் வழங்கப்படும். மூச்சிழுத்தலுடன் ஒன்றிணைத்து இந்த மருந்துகளை பாவிக்க முன் மருத்துவரின் முறையான வழிகாட்டல் அவசியம். ஏனென்றால் சரியான முறையில் உள்ளிழுக்கப்படாது விட்டால் அவை போய்ச் சேரவேண்டிய நுரையீரல்களுக்கு மருந்து சேராமல் வெறுமனே வாயிலே தங்கிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மூச்சுடன் ஒருங்கிசைவாக மருந்தை உள்ளெடுக்க முடியாதவர்கள் ஸ்பேசர் எனப்படும் கண்ணாடிபோன்ற கூட்டை பயன் படுத்துவதன் மூலம் முறையான பலன்களைப் பெறமுடியும். வாய்மூலமான உள்ளிழுத்தல் முறையில் ஸ்திரோயிட்டு மருந்துகளைப் பாவிப்பவர்கள், மருந்தை உள்ளிழுத்து முடிந்ததும் வாயை அலசிக் கொப்பளித்து வெளியே துப்புதல் அவசியம்.
நோய்கள் சிலவற்றுக்கான மருந்துப்பாவனை குறுகிய காலம் கொண்டது. ஆயினும் நீரிழிவு, அதியுயர் குருதி அமுக்கம் (பிரசர்), தையிரோயிட்டு மருந்துப் பாவனை என்பன வாழ்நாள் முழுதும் பாவிக்கப் படவேண்டிய மருந்துகள் ஆகும். இவ்வகை மருந்துகள் பாவிப்பவர்கள் மாதாந்த பரிசோதனைகள் செய்வதன் மூலம் மருந்துகளின் அளவு கூட்டிக்குறைக்கப்படவும் வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களது மருந்தின் அளவு அவர்களின் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை வைத்து தீர்மானிக்கப்படும். அவ்வாறே குருதி அமுக்கம் பரிசோதிக்கப்பட்டே இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்படும். எனவே இந்த நோயாளிகள் கிரமமாக பரிசோதனைகளைச் செய்வதுடன் அவற்றை மருத்துவருக்கு காட்டுவதும் அத்தியாவசியமானது.
சிலவகை மருந்துகளுக்கு சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படலாம். இவ்வாறு மருந்துகளுக்கு அல்லது உணவிற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் கட்டாயமாக அதுபற்றி தான் செல்லும் மருத்துவருக்கு சொல்லவேண்டும்.
வயது சென்றவர்களுக்கு மருந்து கொடுக்கும்போது வீட்டில் உள்ள வேறொருவர் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஞாபக மறதி காரணமாக மருந்தை எடுக்காமல் விடுதலும் அதிகளவான மருந்தை எடுக்கும் அபாயமும் காணப்படுவதால் இவர்களில் விசேட கவனம் செலுத்துதல் அவசியம். முக்கியமாக அவர்களின் மருந்துகளை தனித்தனி பேணிகளில் இட்டு பெயர் எழுதிவைக்கவேண்டும். எல்லா மருந்தையும் ஒரே பேணிக்குள் போடும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்படவேண்டும்.
மருந்துகள் எவ்வாறு பாவிப்பது எனத்தெரியாவிட்டால் மருந்தாளர்களிடமோ அல்லது வைத்தியரிடமோ அது பற்றிக் கூறி தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கில மருந்துகள் தகவலுடன் கொடுக்கப்படும்போது மருந்தாகவும் தவறாக கொடுக்கப்பட்டால் நஞ்சாகவும் இருப்பதே இதற்குக் காரணம். இப்போது புரிகிறதா மருந்துத் துண்டை வைத்தியர் எழுதும்போது ஏன் தெளிவாக எழுதவேண்டும் என நியமங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று. புரியும் எழுத்தில் எழுதுமாறு வைத்தியர்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுவோம்.
வாயுபுத்திரன்