செவ்வாய், 21 அக்டோபர், 2008

பிணிதீர்க்கும் மருந்துகள்.

என்ன எழுதியிருக்கிறது எனத்தெரியாமல் தலையை பிய்த்து கொள்ள வைக்கும் விடயங்களில் ஒன்று வைத்தியர் எழுதித் தரும் மருந்துச் சீட்டு என்றால் அதிலும் ஒரு உண்மையிருக்கிறது. கிறுக்கல் எழுத்துகளுக்குக் கீழே ஒரு கையொப்பத்துடன் அவர் தரும் துண்டைக் கொண்டு போய் மருந்துக்கடைகளில் குளிசைகள் வாங்கிய அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். அந்தக் கிறுக்கல்களை வாசித்து மருந்து கொடுக்கும் மருந்துக்கடைக்காரரை நான் கடவுளுக்கு அடுத்தபடியில் இருப்பவராக நினைத்துக் கொள்ளவதுண்டு. ஆயினும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களில் மருந்துத்துண்டு (Prescription) இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்ற நியதிகள் உண்டு. முக்கியமான முதல் விதி மருந்துத் துண்டுகள் எழுதப்படும்போது வாசிக்கப்படக்கூடிய முறையில் எழுதப்படவேண்டும். அத்துடன் மருந்தின் முழுப்பெயரும் எழுதப்படவேண்டும். முதல் இரண்டு எழுத்துகள் மட்டுமே விளங்கும் விதத்தில் எழுதப்படுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுக் கொள்ளப்படாத குறுக்கங்கள் தவிர்க்கப்படவேண்டும். மருந்துத் துண்டில் நோயாளியின் பெயர், வயது, திகதி என்பன இடப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் மருந்தின் பெயர், எடுக்கப்படவேண்டிய அளவு, ஒருநாளைக்கு எடுக்கப்படவேண்டிய தடவைகள், கொடுக்கப்படவேண்டிய நாட்கள் என்பன தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். மருந்துகள் யாவும் ஆங்கில எழுத்துக்குறிகளிலேயே எழுதப்படும். இவற்றுக்கீழே வைத்தியரின் கையொப்பமும் பதியப்பட வேண்டும்.

இவ்வளவு முன்னேற்பாடுகளும் ஏன் என நீங்கள் சந்தேகப்படலாம். ஆங்கில மருந்துகள் சரியான முறையில் எடுக்கப்படாமல் தவறு நிகழ்ந்தால் நன்மைக்குப் பதிலாக தீமையே விளையும் என்பது உண்மை. முக்கியமாக தீவிரமான மருந்துகள் வழங்கப்படும் போது அதிக கவனம் தேவை. 

ஆங்கில மருந்துகள் பல்வேறுபட்ட முறைகளில் வெளிவருகின்றன. ஊசி மருந்துகளும் குளிசைகளும் கூட்டுக் குளிசைகளும் பாணி மருந்துகளும் பூச்சு மருந்துகளும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டிருப்பினும் உள்ளிழுக்கும் மருந்துகளும் (இன்கேலர்கள்) தோலில் ஒட்டும் துண்டுகள் (Patches) சொட்டு மருந்துகள் (droplets) குதவழி மருந்துகள் என்று பல்வேறு வழிகளில் இந்த மருந்துகள் வெளிவருகின்றன. மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு மருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் போது நோயாளியின் நோய், நோயின் வீரியம் , நோயாளியின் வயது, நோயாளியிடமுள்ள வேறு நோய்கள் போன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மருந்துத் துண்டை எழுதுவார்.

பொதுவாக வாய் மூலம் உள்ளெடுக்கப்படும் குளிசைகள் வயிற்றினுள் சென்று பின்னர் குடலில் அகத்துறிஞ்சப்பட்டு குருதியில் சேர்ந்து பின்னர் குருதி மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை அல்லது மருந்து தொழிற்பட வேண்டிய இடத்தை அடைந்து செயற்பட ஆரம்பிக்கும். இதனால் மருந்து தொழிற்பட நேரம் அதிகம் எடுக்கும். ஊசி மூலம் வழங்கப்படும் மருந்துகள் நேரடியாக குருதியை அடைவதால் வாயில் விழுங்கப்படும் மருந்துகளை விட இவை விரைவான தொழிற்பாட்டைக் காட்டும். ஊசி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. தசைக்குள்ளே செலுத்தப்படும் மருந்துகள் செயற்படக் கொஞ்சம்காலம் அதிகமாகவே தேவைப்படும். ஆனாலும் ஒருதரம் ஏற்றப்பட்ட ஊசி நீண்ட காலத்திற்கு செயற்படும் தன்மையுள்ளதாக இருக்கும். ஊசிமூலம் தசைக்குள்ளே ஏற்றப்படும் கருத்தடை மருந்துகள் மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்தை குருதிக்குள் விடுவதால் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு தொழிற்படும் தன்மை வாய்ந்தது. தோலுக்கு கீழே ஏற்றப்படும் ஊசி மருந்துகள் உள்ளன. இன்சுலின் ஊசி இதற்கு நல்லதொரு உதாரணம். இதுவும் ஊசிமருந்தின் தன்மையை பொறுத்து ஒருநாளைக்கு மூன்று தடவைகள், இரண்டு தடவைகள் அல்லது ஒரு தடவை என வேறு பட்ட இடைவெளிகளில் ஏற்றப்படலாம். இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மருந்து பாவிக்கவேண்டிய தடகைள் என்பது மருந்தின் தன்மையிலும் பாவிக்கப்படும் முறையிலும் தங்கியிருக்கும்.

வாய்மூலமாக விழுங்கும் மருந்துகள் கூட பல்வேறுபட்ட முறைகளில் எடுக்கப் படுகின்றன. சில மருந்துகள் சாப்பாடிற்கு முன்னரும், சில சாப்பாட்டிற்கு பின்னரும் எடுக்கவேண்டும் என வைத்தியரால் கூறப்படும். முக்கியமாக வாந்தியை தடுப்பதற்கான சில மருந்துகள் சாப்பாட்டிற்கு 20 நிமிடங்கள் முன்னர் எடுக்கப்படவேண்டும் என மருத்துவர் சொல்லியிருப்பார். (சாப்பாட்டை முடித்த கையோடு வாந்தியோடு மருந்தும் வெளியேறமுடியாத முன்னேற்பாடு அது) அதுபோல சாப்பாட்டுடன் தாங்கமடைந்து வீரியம் இழந்து போகும் மருந்துகளும் சாப்பாட்டிற்கு முன்னரே எடுக்கப்படவேண்டும். வயிறெரிவுக்கான சில மருந்துகள் சப்பிச் சாப்பிடவேண்டியவை. இவை பெரும்பாலும் செயற்கை சுவையூட்டப்பட்டனவாக இருக்கும். 

வாய்மூலம் விழுங்கப்படும் மருந்துகள் என்று நான் அழுத்திக் குறிப்பிடும்போதே வாய்மூலம் வேறு வகையில் எடுக்கப்படும் மருந்துகள் இருக்கும் என நீங்கள் ஊகித்து இருப்பீர்கள். வாய்மூலம் இழுக்கப்படும் மருந்துகள்தான் அவை! பெரும்பாலும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கு இவ்வகையான மருந்துகள் வழங்கப்படும். மூச்சிழுத்தலுடன் ஒன்றிணைத்து இந்த மருந்துகளை பாவிக்க முன் மருத்துவரின் முறையான வழிகாட்டல் அவசியம். ஏனென்றால் சரியான முறையில் உள்ளிழுக்கப்படாது விட்டால் அவை போய்ச் சேரவேண்டிய நுரையீரல்களுக்கு மருந்து சேராமல் வெறுமனே வாயிலே தங்கிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மூச்சுடன் ஒருங்கிசைவாக மருந்தை உள்ளெடுக்க முடியாதவர்கள் ஸ்பேசர் எனப்படும் கண்ணாடிபோன்ற கூட்டை பயன் படுத்துவதன் மூலம் முறையான பலன்களைப் பெறமுடியும். வாய்மூலமான உள்ளிழுத்தல் முறையில் ஸ்திரோயிட்டு மருந்துகளைப் பாவிப்பவர்கள், மருந்தை உள்ளிழுத்து முடிந்ததும் வாயை அலசிக் கொப்பளித்து வெளியே துப்புதல் அவசியம்.

நோய்கள் சிலவற்றுக்கான மருந்துப்பாவனை குறுகிய காலம் கொண்டது. ஆயினும் நீரிழிவு, அதியுயர் குருதி அமுக்கம் (பிரசர்), தையிரோயிட்டு மருந்துப் பாவனை என்பன வாழ்நாள் முழுதும் பாவிக்கப் படவேண்டிய மருந்துகள் ஆகும். இவ்வகை மருந்துகள் பாவிப்பவர்கள் மாதாந்த பரிசோதனைகள் செய்வதன் மூலம் மருந்துகளின் அளவு கூட்டிக்குறைக்கப்படவும் வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களது மருந்தின் அளவு அவர்களின் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை வைத்து தீர்மானிக்கப்படும். அவ்வாறே குருதி அமுக்கம் பரிசோதிக்கப்பட்டே இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்படும். எனவே இந்த நோயாளிகள் கிரமமாக பரிசோதனைகளைச் செய்வதுடன் அவற்றை மருத்துவருக்கு காட்டுவதும் அத்தியாவசியமானது.

சிலவகை மருந்துகளுக்கு சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படலாம். இவ்வாறு மருந்துகளுக்கு அல்லது உணவிற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் கட்டாயமாக அதுபற்றி தான் செல்லும் மருத்துவருக்கு சொல்லவேண்டும்.

வயது சென்றவர்களுக்கு மருந்து கொடுக்கும்போது வீட்டில் உள்ள வேறொருவர் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஞாபக மறதி காரணமாக மருந்தை எடுக்காமல் விடுதலும் அதிகளவான மருந்தை எடுக்கும் அபாயமும் காணப்படுவதால் இவர்களில் விசேட கவனம் செலுத்துதல் அவசியம். முக்கியமாக அவர்களின் மருந்துகளை தனித்தனி பேணிகளில் இட்டு பெயர் எழுதிவைக்கவேண்டும். எல்லா மருந்தையும் ஒரே பேணிக்குள் போடும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்படவேண்டும்.




மருந்துகள் எவ்வாறு பாவிப்பது எனத்தெரியாவிட்டால் மருந்தாளர்களிடமோ அல்லது வைத்தியரிடமோ அது பற்றிக் கூறி தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கில மருந்துகள் தகவலுடன் கொடுக்கப்படும்போது மருந்தாகவும் தவறாக கொடுக்கப்பட்டால் நஞ்சாகவும் இருப்பதே இதற்குக் காரணம். இப்போது புரிகிறதா மருந்துத் துண்டை வைத்தியர் எழுதும்போது ஏன் தெளிவாக எழுதவேண்டும் என நியமங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று. புரியும் எழுத்தில் எழுதுமாறு வைத்தியர்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுவோம். 

வாயுபுத்திரன்

வியாழன், 16 அக்டோபர், 2008

தன்கையே தனக்குதவி

அதிகமான இரத்த இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு செய்வதென்பது நீண்ட காலமாக மருத்துவர்கள் பயன் படுத்தும் ஒரு சிகிச்சை முறை. முக்கியமாக சத்திர சிகிச்சைகள் திட்டமிடப்படும்போது இதற்கு இவ்வளவு இரத்தம் தேவைப்படலாம் என முன்கூட்டியே நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து பின்னர் சத்திர சிகிச்சைகளை தொடங்குவது வழமை. சத்திர சிகிச்சையின் போது அல்லது அதற்கு பின்னான காலப்பகுதியில் குருதிப்பெருக்கு ஏற்பட்டால் சிலவேளைகளில் மேலதிக குருதியை வழங்கவேண்டிய நிர்ப்பந்ததில் வைத்தியர்கள் இருப்பார்கள். ஒரு வைத்தியசாலைக்கு தேவையான குருதி அங்கே காணப்படும் இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இரத்த வங்கிகள் அல்லாத சிறிய வைத்தியசாலைகள் தங்களுக்கு அருகில் இருக்கும் இரத்த வங்கியுள்ள பெரிய வைத்தியசாலைகளில் தங்கள் இரத்த தேவைகளுக்காகத் தங்கியிருக்கும். 


இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் முனைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட முறைதான் ஒருவரின் குருதியை எடுத்து அவருக்கே பாவிக்கும் Autologus Transfusion என்ற முறை! இவ்வாறு ஒருவரின் குருதியை அவருக்கே பாவிப்பதில் பல்வேறு நுட்பங்கள் பாவிக்கப்படலாம். 

ஒருவருக்குசத்திரசிகிச்சை திட்டமிடபபடும்போது முதலிலேயே அவரது குருதியை சேமித்து அவருக்கு வழங்கும் முறை உள்ளது. இதன்போது சத்திர சிகிச்சை நடைபெறும் தினத்திற்கு 4 வாரங்களுக்கு முன்னர் ஒரு பைந்து ரத்தமும் இவ்வாறு ஒரு வார கால இடைவெளிகளில் ஒவ்வொரு பைந்து குருதியும் சேர்க்கப்படும். ஒரு பைந்து இரத்தம் என்பது 450 மில்லிலீற்றர் குருதியாகும். இவ்வாறு சேர்க்கப்பட்ட குருதி இரத்தம் மூலம் பரவும் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். (அவரவர் குருதியை அவரவருக்கு செலுத்தும்போது கூட இந்த சோதனை தேவைதானா என நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது.) இவ்வாறு மொத்தமாக 4 பைந்து இரத்தம் சேமிக்கப்பட முடியும். சாதாரண தானம் செய்பவருக்கு ஆகக்குறைந்தது ஒரு டெசி லீற்றருக்கு 12 கிராம் ஈமோகுளோபின் இருக்கவேண்டும் என முன்பு சொன்னேன். ஆனால் தனக்குத் தானே தானம் செய்பவருக்கு ஆரம்பத்தில் ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 11 கிராம் இருந்தாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். இவ்வாறு சேமிக்கப்பட்ட இரத்தம் விசேட அடையாளத்துடன் தனியான குளிரூட்டியில் சேமிக்கப்படும். சத்திரசிகிச்சையின்போது இரத்தம் ஏற்றப்படும் தேவை ஏற்படாது விட்டால் இந்த குருதி வேறு ஒருவருக்காகவும் பாவிக்கப்படாது வீசப்படும். இது இந்த முறையில் உள்ள குறைபாடு என்றும் சொல்லலாம். ( சாதாரண தானம் மூலம் பெறப்பட்ட குருதி என்றால் அது வேறு ஒரு நோயாளிக்கு பாவிக்கப்படலாம்.) ஆனாலும் இந்த விசேட முறையிலான தனக்குத்தானே இரத்தம் வழங்கும் முறையால் அரத்தம் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சாத்தியம் குறைவு, மற்றும் இரத்தம் ஏற்றப்படும்போது ஏற்படும் எதிர்ப்பு ஒவ்வாமை ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறைவு. தவிர மிகவும் அரிதாக காணப்படும் பம்பாய் ஓ போன்ற வகையில் குருதியை கொண்டிருப்போர்களுக்கு இவ்வாறான தனக்குத் தானே குருதி வழங்கல் முறை மிகவும் பயனுள்ளது


இரத்த வங்கிகள் குருதியின் கூறுகளான செங்குழியங்கள், வெண்குழியங்கள், குருதிச் சிறுதட்டுகள், குருதித் திரவ இழையம் போன்றனவற்றை சேமித்து வைத்திருக்கும். 
இரத்தவங்கிகள் யாரிடமிருந்து குருதியை பெற்றுக்கொள்கின்றன? குருதியை தானம் செய்பவர்கள் மூன்று வகையினர். ஒருவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி இலவசமாக பொதுநர நோக்கோடு தானம் செய்பவர் முதலாவது வகையினர். தங்கள் உறவினர் நண்பர்களின் இரத்தத் தேவைக்காக வந்து தானம் செய்பவர்கள் இரண்டாம் வகையினர், காசு பெற்றுக்கொண்டு இரத்தத்தை வழங்குபவர்கள் மூன்றாம் வகையினர். இவ்வாறு பணம் பெற்று குருதியை வழங்குவது இலங்கையில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொது நோக்கோடு தானம் செய்பவர்களிடமிருந்தும், உறவினர் நண்பர்களுக்காக தானம் செயப்வர்களிடமிருந்தும் மட்டுமே தற்போது இரத்தம் பெறப்படுகிறது.
இரத்ததானம் செய்பவர்கள் நோய்நொடி இல்லாதவர்களாகவும், போதியளவு ஈமோகுளோபின் கொண்டவர்களாகவும் (ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 12 கிராம்), ஆபத்தான பாலியல் தொடர்புகள் இல்லாதர்களாகவும், குறைந்தது 50 கிலோகிராம் உடல்நிறை உடையவர்களாகவும் இருத்தல் அவசியம். 
இவ்வாறு தானமாகப் பெறப்பட்ட குருதியின் அளவைவிட அதிக நோயாளிகளுக்கு அதிக குருதித் தேவை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் கையைப்பிசைந்து கொண்டிருக்கும் தன்மை எதிர்காலத்தில் ஏற்படலாம். அதைத் தவிர சில மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றையவர்கள் தந்த குருதி மாற்றீடுகளை மறுக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கும் ஒரு மாற்று வழியை தேடவேண்டிய நெருக்கடி வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தானமாக வழங்கப்படும் குருதி எப்போதும் ஆய்வு கூடப்பரிசோதனைகளின் பின்னரை பாவிக்கப்படுகிறது என்றாலும் உலகத்தில் அதிகரித்து வரும் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் குருதி மூலம் பரவும் சந்தர்ப்பம் சிறிய அளவில் இன்னமும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.






தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு வகை சத்திர சிகிச்சைக்கு சற்று நேரத்திற்கு முன்னர் சத்திர சிகிச்சைக்கூடத்தில் வைத்து அவரின் குருதியை எடுத்து அதற்கு பதிலாக சேலைன் ஏற்றிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தல் ஆகும். இம்முறையில் இரண்டு பைந்து இரத்தம் சேமிக்கமுடியும். பின்னர் சத்திர சிகிச்சை முடியும் தறுவாயில் மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இதன்போது இரண்டாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து முதலில் ஏற்றப்படும். முதலாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து இரண்டாவதாக ஏற்றப்படும். இங்கே இரண்டு பை இரத்தமும் நோயாளியுடனேயே இருப்பதால் அடையாளக்குறிகள் மாறுவதன் மூலம் தவறான இரத்தம் செலுத்தப்படும் அபாணம் இல்லை. அத்துடன் சத்திர சிகிச்சை முடிந்நதும் மீண்டும் இரத்தம் ஏற்றப்படுவதால் வீண்விரயமும் குறைவு. ஆனால் வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர் போன்றோரின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியமானது.


தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு முறைதான் சத்திர சிகிச்சையின்போது வெளியேறும் குருதியை சேர்த்து பின்னர் சுத்திகரித்து மீண்டும் நோயாளிக்கு ஏற்றும் முறையாகும். இதை எல்லா சத்திர சிகிச்சையிலும் பாவிக்கமுடியாது. என்பு சத்திர சிகிச்சை, இதய சத்திர சிகிச்சை, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை போன்றவற்றில் மட்டும் பாவிக்கமுடியும். கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகமுள்ள குடல் சத்திர சிகிச்சை போன்றசவ்வில் இம்முறையை பாவிக்கவே முடியாது. இந்த முறையை பாவிப்பதற்கு சிர விசேட இயந்திரங்களும் அவசியமானவை.
என்னதான் தன்கையே தனக்குதவி என்று இருந்தாலும் உடவில் கிருமிதொற்று உள்ள நோயாளிகள், சிலவகை இதய நோயாளிகள், வலிப்பு நோய் உள்ளவர்கள், குருதி ஆமுக்கம் அதிகமுள்ள தாய்மார்கள், வளர்ச்சி குறைநடத குழந்தையை கருவில் தாங்கும் தாய்மார்கள், புற்று நோய் உள்ளவர்கள் என்று தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் பங்கெடுக்கமுடியாதவர்கள் பலரும் உள்ளார்கள். எனவே சாதாரண குருதிக் கொடையாளிகளை மருத்துவ உலகம் எப்போதும் எதிர்பார்த்தே இருக்கிறது. உங்களுக்கு என்ன வயதாகிறது? பதினெட்டு முடிந்து விட்டதா? இதுதான் நல்ல நேரம். ஒருமுறை இரத்ததானம் செய்துபாருங்கள். உலகத்தையே வென்றுவிட்டது போல உணர்வீர்கள். இது ஒரு புண்ணியமாகப் போகட்டும்.